தினத்தந்தி
பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழங்களின் சீசன் தொடங்கி விட்டது. இருப்பினும் இரவில் நீரிழிவு நோயாளிகள், செரிமான பிரச்சினை கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கான சில காரணங்கள்..
உடலின் செரிமான செயல்முறை இயற்கையாகவே இரவில் மெதுவாக நடக்கும். இனிப்பு பழமான மாம்பழத்தை மாலை நேரத்திற்கு பின்பு உட்கொள்ளும்போது ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கலாம்.
வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறு, வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்ற அசவுகரியங்களை ஏற்படுத்தலாம்.
மாம்பழங்களில் இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) அதிகமாக உள்ளது. இரவில் அதை சாப்பிடும்போது திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும்.
உடல் செயல்பாடு அதிகம் இல்லாத இரவு நேரத்தில் அதை சாப்பிடும்போது, கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக சேமிக்கப்படலாம். காலப்போக்கில் உடல் எடை அதிகரிக்க வழிவகுத்து விடலாம்.
மாம்பழங்கள் இயல்பாகவே உடல் ஆற்றலை அதிகரிக்க செய்யும். உறங்குவதற்கு முன்பு அதனை உட்கொள்வது உடல் தசைகள் தளர்வடைவதற்கு இடையூறாக அமையலாம்.
மேலும் இரவில் உடல் முழுமையாக ஓய்வு பெற முடியாமல் தூக்கத்தின் தரம் குறையவும், தூக்கத்திற்கு இடையூறுகள் உருவாகவும் வாய்ப்புள்ளது.
மாம்பழம் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் சுவையான பழமாக இருந்தாலும், செரிமான கோளாறு, ரத்த சர்க்கரை உயர்வு, உடல் எடை அதிகரிப்பு, தூக்கக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க பகல் நேரத்தில் சாப்பிடுவதே சிறந்தது.