தினத்தந்தி
தேவையான பொருட்கள்: மைதா - 4 கப், ஈஸ்ட் - 5 கிராம், சீனி - அரை தேக்கரண்டி, உப்பு - ஒரு தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு
ஸ்டப்பிங் செய்ய: பீட்ஸா சாஸ் - தேவையான அளவு, தக்காளி - ஒன்று ,பெரிய வெங்காயம் - ஓன்று, கேரட் - ஒன்று, குடை மிளகாய் - பாதி, பச்சை மிளகாய் - ஒன்று, துருவிய சீஸ் - தேவையான அளவு
காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்னர் ஒரு கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கி, அந்த கலவையை 10 நிமிடங்கள் ஓய்வாக வைத்து விடவும்.
10 நிமிடங்கள் கழித்து, 3 கப் மைதா மாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலக்கவும். பின்னர் முன் தயாரித்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பரோட்டா மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.
பிசைந்த மாவை ஒரு ஈரத் துணியால் மூடி ஒரு மணி நேரம் வைத்தால், அது இருமடங்காக பெரிதாகி இருக்கும்.
பின்னர் மாவை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து, மறுபடியும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து, ஓவன் ட்ரேயில் மாவை வைத்து கையால் சமமாக விரித்து விடவும். ஓரங்களில் விரலால் சமமாக அழுத்தி விடவும். இப்போது பீட்சா பேஸ் தயாராகி விடும்.
அதன் மேல் தேவையான அளவு பீட்சா சாஸ் தடவி, நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக தூவவும். பின்னர் துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும்.
அதன் மேல் சிறிதளவு எண்ணெயை ஆங்காங்கே சேர்க்கவும். மேலும் பீட்சாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும். இதனால் வேகும் போது ஓரங்கள் கிறிஸ்பியாக இருக்கும்.
பின்னர் ட்ரேயை எலக்ட்ரிக் அடுப்பில் ஸிம்மில் வைத்து சூடாக்கவும். ப்ளேம் கொண்ட அடுப்பு பயன்படுத்தினால், புல் ப்ளேமில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் ட்ரேயை வைக்கவும். ட்ரே நன்றாக சூடானதும் எடுத்துவிடவும்.
பீட்சாவின் ஓரங்கள் பொன்னிறமாக மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்றாக உருகி கலந்ததும் வெளியே எடுக்கவும். இப்போது சூப்பரான வீட்டிலேயே தயாரித்த பீட்சா ரெடி.