பாட்டி வைத்தியத்தில் நம்பர் 1 – பெருங்காயம் ஏன் தெரியுமா?

தினத்தந்தி

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானை தாயகமாகக் கொண்ட பெருங்காயம், கசப்பு மற்றும் காரத் தன்மை கொண்டது. இது நரம்புகளைத் தூண்டி, சுவை உணர்வை மேம்படுத்த உதவுகிறது.

உடல் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்ட பெருங்காயம், சமையலில் நறுமணமூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

இஞ்சிச் சாறு மற்றும் தேனுடன் பெருங்காயத்தை கலந்து குடித்தால், குடலில் உள்ள கிருமிகளை நீக்கி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

சுவாச நோய்கள், நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை, வலிப்பு போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும் தன்மை பெருங்காயத்திற்கு உள்ளது.

பிரசவத்திற்குப் பிறகு, தாயின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற, பெருங்காயத்தைப் பொரித்து வெள்ளைப் பூண்டு மற்றும் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் சாப்பிடலாம்.

முட்டையின் மஞ்சள் கருவுடன் பெருங்காயத்தை கலந்து சாப்பிட்டால், வறட்டு இருமல் குறையும். பெருங்காயப் பொடியை மிதமான தீயில் வறுத்து, சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்தால் பல் வலி குறையும்.

பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு அதன் புகையை சுவாசித்தால், ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் பிரச்சனைகள் குறையும். இதில் உள்ள ரசாயனக் கூறுகள் மார்புச் சளியை வெளியேற்ற உதவும்.

தினமும் காலை வேளையில் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை வெந்நீரில் கலந்து குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும்.

இதில் உள்ள சத்துக்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குறிப்பு: தினமும் 5 முதல் 30 மில்லிகிராம் வரை பெருங்காயம் எடுத்துக்கொள்வது நல்லது. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், உடலில் பித்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

முகம் பளபளக்கும், முடி பலமாகும் – கொய்யா இலை பயன்கள்