சத்து நிறைந்த வெள்ளரிக்காய் இட்லி!

தினத்தந்தி

வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதை வைத்து சுவையான, சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; வெள்ளரிக்காய் - 250 கிராம், ரவை - 250 கிராம், தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, புளித்த தயிர் -3 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

1. செய்முறை; பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் துருவிய வெள்ளரிக்காய் மற்றும் ரவையைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

3. பின்னர் அதனுடன் தேங்காய்த் துருவல், புளித்த தயிர், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

4. மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.

5. அரை மணி நேரத்திற்குப் பிறகு இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இட்லித் தட்டுகளில் சிறிது எண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள மாவை ஊற்றவும்.

6. இட்லித் தட்டுகளை இட்லி பானையில் வைத்து மூடி, சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் இட்லிகளை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.

7. சுவையான வெள்ளரிக்காய் இட்லியை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்துப் பரிமாறலாம். சத்தும் சுவையும் நிறைந்த இந்த இட்லி தயார்!

சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி?