தினத்தந்தி
ஓணம் சத்யா என்பது கேரளாவின் பாரம்பரிய உணவு விருந்தாகும். “கானம் விற்றாவது ஓணம் உண்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஓணம் பண்டிகையில் உணவுக்கும் விருந்தோம்பலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஓணம் பண்டிகை பொதுவாக 10 நாட்கள் கொண்டாடப்படும் நிலையில், திருவோணம் நாளில் நடைபெறும் சத்யா மிகவும் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றாக அமர்ந்து இந்தப் பாரம்பரிய விருந்தை உண்பது வழக்கம்.
ஓணம் சத்யாவில் பலவிதமான சைவ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர், அவியல், தோரன், காலன், ஓலன், எரிசேரி, கூட்டு, பச்சடி, கிச்சடி உள்ளிட்ட பல உணவு வகைகள் இதில் இடம்பெறும்.
இனிப்பு வகைகளில் அடை பிரதமன், பால் பாயசம் உள்ளிட்ட பாயசங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. சர்க்கரைப் புரட்டி, பப்படம், ஊறுகாய் உள்ளிட்டவையும் சத்யா விருந்தின் சுவையை மேலும் அதிகரிக்கின்றன. ஓணம் சத்யாவின் மற்றொரு சிறப்பு, உணவு வாழை இலையில் பரிமாறப்படுவது.
வாழை இலையில் உணவு பரிமாறும் பாரம்பரியம் கேரளாவின் கலாசாரத்துடன் நீண்ட காலமாக இணைந்துள்ளது.
சத்யாவில் இடம்பெறும் உணவுகளில் தேங்காய், தேங்காய்ப்பால், தயிர், மோர் போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுகளுக்கு தனித்துவமான கேரள சுவையும் மணமும் கிடைக்கிறது.