தினத்தந்தி
கேரளாவில் மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். ஓணம் பண்டிகையில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்புகளில் பருப்பு பாயாசமும் முக்கியமானது. சுவையான கேரளா பருப்பு பாயாசத்தை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - ½ கப், வெல்லம் - ½ கப், தேங்காய்ப்பால் - 1 கப், பால் - ½ கப், முந்திரி - ஒரு கைப்பிடி, சுக்குப்பொடி - 1 சிட்டிகை, நெய் - தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கரையவிடவும். பின்னர் வடிகட்டி வெல்லப் பாகை தனியாக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் கடலைப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுத்து, குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். பருப்பு நன்றாக வெந்ததும் லேசாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக எடுத்துவைக்கவும். வடிகட்டிய வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் சூடாக்கவும்.
அதில் வேகவைத்த கடலைப்பருப்பை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பருப்பும் வெல்லப் பாகும் நன்றாகக் கலந்ததும் தேங்காய்ப்பாலை சேர்க்கவும்.
பாயாசம் கொதிக்கத் தொடங்கியதும் சுக்குப்பொடி மற்றும் பாலை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்கவிடவும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்தால், மணமணக்கும் கேரளா ஓணம் ஸ்பெஷல் பருப்பு பாயாசம் தயார்.