சிறிய விதை… பெரிய மருத்துவ பயன்!

தினத்தந்தி

பப்பாளியின் காய் மற்றும் பழத்தைப் போலவே அதன் விதைகளும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டவை. இதில் பாலிபீனால், பிளேவனாய்டுகள், ஆன்டிஆக்சிடன்டுகள் போன்ற மைக்ரோ நியூட்ரியன்கள் அதிகம் உள்ளன.

பப்பாளி விதைப் பொடியை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு முன்பு தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்ப்போம்.

கொழுப்பைக் குறைக்கும்: பப்பாளி விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம் மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி நச்சுக்களை வெளியேற்றும். இதனால் உடல் எடை குறையும். ரத்த அழுத்தம் சீராகி, இதயம் பலம் பெறும்.

மாதவிலக்கை சீராக்கும்: பப்பாளி விதைகளில் உள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்க உதவும். இதனால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வலி குறையும்.

சரும பராமரிப்பு: பப்பாளி விதையில் உள்ள சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, வயது முதிர்ச்சியால் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகாமல் தடுக்கும்.

பொடுகைப் போக்கும்: உலர்ந்த பப்பாளி விதைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முடி அடர்த்தியாக வளரும். பப்பாளி விதைகளில் உள்ள ஒலியிக் அமிலம் தலையில் பொடுகு வராமல் தடுக்கும்.

நோய்த் தொற்றைத் தடுக்கும்: பப்பாளி விதையில் உள்ள மூலக்கூறுகள் பூஞ்சை, பராசைட்டுகள் மற்றும் ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர்களுக்கு எதிராக செயல்பட்டு, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

எச்சரிக்கை: பப்பாளி விதைகளை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்கு சாப்பிட வேண்டும். அதிகமாக உட்கொள்வதால் பாதிப்புகள் ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது சிறந்தது.

ஐஸ் குளியல்: நன்மைகளும், வழிமுறைகளும்..!