பாரம்பரிய பால்கோவா செய்வது எப்படி?

தினத்தந்தி

பால் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டு முக்கியப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சுவையான பாரம்பரிய இனிப்பு பால்கோவா. வீட்டிலேயே எளிய முறையில், பொறுமையாகச் செய்தால் மிகவும் சுவையான பால்கோவாவைத் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பால் - 1 லிட்டர், சர்க்கரை - ¼ கப், நெய் - 2 தேக்கரண்டி, ஏலக்காய் - 1

செய்முறை; அடிப்பகுதி கனமான அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பால் பொங்கி வழியாமல் இருக்க அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

பால் கொதிக்கும்போது பாத்திரத்தின் ஓரங்களில் படியும் பாலாடையை கரண்டியால் சுரண்டி மீண்டும் பாலுடன் சேர்த்து கிளறவும். தொடர்ந்து மிதமான தீயில் சமைப்பதால் பாலின் அளவு படிப்படியாகக் குறைந்து கெட்டியாகத் தொடங்கும்.

பால் நன்றாகச் சுண்டி, கெட்டியான பதத்திற்கு வந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை உருகியதும் கலவை மீண்டும் சற்று இளகும். தொடர்ந்து கிளறியபடி சுமார் 2 நிமிடங்கள் சமைக்கவும்.

பின்னர் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். ஏலக்காயை பொடித்து சேர்த்து, கலவை பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

ஒரு கட்டத்தில் பால்கோவா பாத்திரத்தின் ஓரங்களில் இருந்து பிரிந்து, கரண்டியில் ஒட்டியபடி ஒரே திரளாக வரத் தொடங்கும். அந்த பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.

பால்கோவா ஆறும்போது மேலும் கெட்டியாகும். எனவே அடுப்பிலேயே மிகவும் கெட்டியாகும் வரை சமைக்க வேண்டாம். சரியான பதத்தில் அடுப்பை அணைத்தால், ஆறிய பிறகு சுவையான பால்கோவா கிடைக்கும்.

சுவையான பாரம்பரிய பால்கோவா தயார்! இதை சூடாகவும் பரிமாறலாம் அல்லது முழுமையாக ஆறவைத்து பரிமாறலாம்.

ஈஸியான குக்கிங் டிப்ஸ்..!