பெற்றோரிடம் இருந்து விலகும் டீனேஜர்கள்... மீண்டும் நெருக்கமாக்கும் 6 வழிகள்!

தினத்தந்தி

பதின்பருவம் என்பது குழந்தைகளின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். இந்த வயதில் அவர்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை விரும்புவதால், பெற்றோரிடம் இருந்து சற்று விலகி இருப்பது இயல்பானது.

குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துவிட்டு, திடீரென கட்டுப்பாடுகளை விதிப்பது அவர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தலாம். எனவே, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அன்புடன் அணுகுவது அவசியம்.

1. அமைதியான நேரத்தைத் தேர்வு செய்யுங்கள்; குழந்தைகள் நிதானமாக இருக்கும் நேரத்தைத் தேர்வு செய்து தினமும் சிறிது நேரம் அவர்களுடன் பேசுங்கள். மாலை நேரம் அல்லது இரவு உணவு நேரம் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்தலாம். அவர்களை பேச கட்டாயப்படுத்தாமல், தாமாக பேசுவதற்கான சூழலை உருவாக்குங்கள்.

2. முழுமையாகக் கவனித்துக் கேளுங்கள்; குழந்தைகளுடன் பேசும்போது செல்போன், தொலைக்காட்சி போன்றவற்றை ஒதுக்கி வையுங்கள். பள்ளியில் நடந்த விஷயங்களைப் பற்றி கேட்டு, அவர்கள் பேசுவதை இடையில் குறுக்கிடாமல் கவனமாகக் கேளுங்கள். மென்மையான கேள்விகள் மூலம் அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கலாம்.

3. உடனடியாக அறிவுரை கூற வேண்டாம்; குழந்தைகள் ஏதாவது பிரச்சினையைப் பகிரும்போது, உடனே அறிவுரை வழங்குவதையோ “நான் அப்பவே சொன்னேனே” என்று கூறுவதையோ தவிர்க்கவும். முதலில் அவர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

4. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்; உங்கள் பதின்பருவத்தில் சந்தித்த சிரமங்கள், குழப்பங்கள் போன்றவற்றை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் வளர்ந்து வரும் காலத்தில் சிரமங்களும் தவறுகளும் இயல்பானவை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

5. அவர்களுடன் செலவிடும் நேரத்தைப் பாராட்டுங்கள்; உங்களுடன் நேரம் செலவிட்டு பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்பதை குழந்தைகளிடம் வெளிப்படையாகச் சொல்லுங்கள். தங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் முக்கியத்துவமும் இருப்பதை அவர்கள் உணரும்போது, பெற்றோரிடம் மீண்டும் மனம் திறந்து பேசுவதற்கான நெருக்கம் அதிகரிக்கும்.

6. அவர்களின் தனிப்பட்ட இடத்தை மதியுங்கள்; பதின்பருவத்தில் குழந்தைகள் தனியாக இருக்கவும், தங்களுக்கான நேரத்தை செலவிடவும் விரும்பலாம். அவர்களின் தனிப்பட்ட இடத்தை மதிப்பதுடன், தேவைப்படும் நேரத்தில் எப்போதும் ஆதரவாக இருப்போம் என்பதை உணர்த்துங்கள்.

குழந்தைகளுக்கு ஆப்பிள் தோலுடன் கொடுக்கலாமா? பெற்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!