தினத்தந்தி
முதலில் ஒரு பேப்பரில் வெறும் காலுடன் நின்று உங்கள் பாதங்களின் வடிவத்தை முறையாக வரைந்து கொள்ளுங்கள். பின்னர் வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஷூக்களை எடுத்து, அந்த வரைபடத்தின் மீது வைத்து அளவு சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
பெண்கள் பொதுவாக முன்பகுதி குறுகலாக இருக்கும் ஷூக்களை விரும்பி அணிவார்கள். ஆனால் பாதத்தின் முன்பகுதி அகலமாக இருந்தால், இத்தகைய ஷூக்கள் அதிக வலியை ஏற்படுத்தும். எனவே காலுக்கு பொருந்தாத ஷூக்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.
புதிய ஷூ வாங்க செல்லும்போது மதிய நேரத்தை தேர்வு செய்யுங்கள். அந்த நேரத்தில் கால்கள் இயல்பாக சற்று விரிவடைந்திருக்கும் என்பதால் சரியான அளவை தேர்வு செய்ய முடியும்.
நீங்கள் வழக்கமாக எந்த வகை சாக்ஸ் அணிவீர்களோ, அதே சாக்ஸை அணிந்தபடியே ஷூ வாங்கச் செல்ல வேண்டும். இதனால் ஷூவின் உண்மையான பொருத்தத்தை அறியலாம்.
ஒவ்வொரு முறை ஷூ வாங்கும்போதும் கால்களின் அளவை மீண்டும் அளந்து பார்க்க வேண்டும். வயது, உடல் எடை மற்றும் பிற காரணங்களால் கால்களின் அளவில் மாற்றம் ஏற்படலாம். மேலும், இரண்டு கால்களுக்கும் சிறிய அளவு வேறுபாடு இருக்க வாய்ப்புள்ளது.
ஷூவை அணிந்த பிறகு எழுந்து நின்று பார்க்க வேண்டும். உங்கள் நீளமான விரலுக்கும் ஷூவின் முன்பகுதிக்கும் இடையில் அரை அங்குலம் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். சிறிது தூரம் நடந்து பார்த்து வசதியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஷூவின் உள்பகுதி மென்மையாக இருக்க வேண்டும். மிகவும் இறுக்கமான ஷூக்களை “பிறகு தளர்ந்து விடும்” என்ற எண்ணத்தில் வாங்கக் கூடாது. அதுபோன்ற ஷூக்கள் பாதங்களில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதேபோல், மிகவும் தளர்வான ஷூக்களை “குழந்தை வளர்ந்த பிறகும் பயன்படுத்தலாம்” என்று வாங்குவது தவறு. அவை நடக்கும் போது தடுக்கி விழும் அபாயத்தை அதிகரிக்கும். மேலும், ஷூவின் அடிப்பகுதி வழுக்காத வகையில் இருக்க வேண்டும்.
முறையற்ற ஷூக்களை தொடர்ந்து அணிவதால் கட்டைவிரல் அருகே எலும்புத் திசுக்கள் பெரிதாகி, விரல்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம். இதனால் வலி, வீக்கம், கால் ஆணி, புண்கள் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். சில நேரங்களில் விரல்கள் மடங்கி சீர்குலைந்து, அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவிற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.