தினத்தந்தி
உடலின் தசைகள் வலுவாக இருக்கவும், புதிய திசுக்கள் உருவாகவும், சேதமடைந்த திசுக்கள் விரைவாக சரியாகவும் புரதச்சத்து மிகவும் அவசியம். மேலும், என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியிலும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
புரதம் என்றாலே முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள் மட்டுமல்ல. சில பழங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு புரதச்சத்து உள்ளது. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துகளை எளிதாகப் பெறலாம்.
அவகேடோ ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழமாகும். ஒரு கப் அவகேடோவில் சுமார் 3 கிராம் புரதம் உள்ளது. அதோடு நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் C, E மற்றும் K ஆகிய சத்துகளும் அதிகமாக உள்ளன.
கொய்யாப்பழம் வைட்டமின் C நிறைந்த பழங்களில் ஒன்றாகும். ஒரு கப் கொய்யாப்பழம் சுமார் 4 கிராம் புரதத்தை வழங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
கிவி பழத்தில் வைட்டமின் C, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஒரு கப் கிவி பழம் சுமார் 2 கிராம் புரதத்தை வழங்குவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.
மாதுளை வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழமாகும். 100 கிராம் மாதுளையில் சுமார் 1.7 கிராம் புரதம் உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கும், ரத்த சோகையைத் தடுக்கவும் இது உதவுகிறது.
சர்க்கரை பாதாமி (ஆப்ரிகாட்) பழத்தில் வைட்டமின் A, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்கள் உள்ளன. 100 கிராம் ஆப்ரிகாட் பழத்தில் சுமார் 1.4 கிராம் புரதம் கிடைக்கிறது. அதேபோல் கிரேப் புரூட் ஒரு கப்புக்கு சுமார் 1.3 கிராம் புரதத்தை வழங்குவதுடன், வைட்டமின் C, கால்சியம் மற்றும் இரும்புச்சத்தையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் ஒரு கப்புக்கு சுமார் 1.6 கிராம் புரதத்தை வழங்குகிறது. இதில் வைட்டமின் A, B6, C, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. செர்ரி பழத்திலும் ஒரு கப்புக்கு சுமார் 1.6 கிராம் புரதம் உள்ளது. இது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது.