தினத்தந்தி
கண்ணாடி எல்லா நிறங்களையும் பிரதிபலிப்பதால், அதற்கென்று தனியாக ஒரு நிறம் இல்லை என்று பலரும் நினைப்பார்கள். சிலர் கண்ணாடியின் நிறம் வெள்ளி அல்லது வெள்ளை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் கண்ணாடிக்கு மிகச் சிறிய பச்சை நிறச் சாயல் உள்ளது.
நாம் வீடுகளில் பயன்படுத்தும் பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்கா கிளாஸ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் பின்புறத்தில் ஒளியை பிரதிபலிக்கும் உலோகப் பூச்சு அமைக்கப்படுகிறது.
ஒரு கச்சிதமான கண்ணாடி அனைத்து நிறங்களையும் ஒரே அளவில் பிரதிபலித்தால், அது வெள்ளை நிறமாகவே தோன்றும். ஆனால் நடைமுறையில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் அனைத்து அலைநீளங்களையும் ஒரே அளவில் பிரதிபலிப்பதில்லை.
குறிப்பாக பச்சை நிற ஒளியை மற்ற சில நிறங்களை விட சற்றே அதிகமாக பிரதிபலிக்கும் தன்மை கண்ணாடிக்கு உள்ளது. இதன் காரணமாகவே கண்ணாடியின் பிரதிபலிப்பில் லேசான பச்சை நிறச் சாயலைக் காண முடியும்.
இந்த நிற வேறுபாடு மிகவும் நுணுக்கமானது என்பதால், சாதாரணமாக கண்ணாடியைப் பார்க்கும்போது நம் கண்களுக்கு அது தெரியாது. அதனால்தான் கண்ணாடி வெள்ளி நிறத்தில் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.