தினத்தந்தி
குழந்தைகள் படிப்பு, விளையாட்டு மற்றும் ஓய்வு ஆகியவற்றுக்கு சரியான நேரத்தை ஒதுக்கி பழக்கப்படுத்த வேண்டும். எப்போதும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தாமல், அவர்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடவும் நேரம் வழங்க வேண்டும்.
தொடர்ச்சியாக நீண்ட நேரம் படிப்பதை விட, குறிப்பிட்ட நேரம் படித்த பிறகு சிறிய இடைவெளி எடுப்பது நல்லது. உதாரணமாக 25 நிமிடங்கள் படித்தால் 5 நிமிடங்கள் ஓய்வெடுக்கும் 'பொமடேரோ டெக்னிக்' குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்க உதவும்.
குழந்தைகளை அதிக நேரம் படிக்க கட்டாயப்படுத்தாமல், குறுகிய இடைவெளிகளுடன் படிக்க ஊக்குவிக்க வேண்டும். இது சோர்வை குறைத்து படிப்பின் மீது ஆர்வத்தை அதிகரிக்கும்.
முழு புத்தகத்தையும் திரும்பத் திரும்ப படிப்பதை விட, முக்கிய குறிப்புகளை எழுதி வைத்து படிப்பது எளிதாக இருக்கும். இதனால் பாடங்களை விரைவாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
மனப்பாடம் செய்வதை விட, பாடங்களை புரிந்து படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். 'ஏன்?', 'எதற்கு?', 'எப்படி?' போன்ற கேள்விகளை கேட்டு பதில்களை தேடி படித்தால் கற்றல் திறன் மேம்படும்.
படிக்கும் சூழல் அமைதியாகவும் கவனச்சிதறல் இல்லாமலும் இருக்க வேண்டும். இதனால் குழந்தைகள் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும்.
சிறிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைந்தபோது பாராட்டுவது, குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் படிக்கும் ஆர்வத்தையும் அதிகரிக்கும்.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் இணைந்து படிப்பு குறித்து பேசுவதும், அவர்களின் முயற்சிகளை ஊக்குவிப்பதும் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.