காரசாரமான இறால் சுக்கா மசாலா.. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்..!

தினத்தந்தி

இறாலில் புரதச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சாப்பாட்டுடன் சேர்த்து சுவைக்க செம்ம காரசாரமான இறால் சுக்கா மசாலா அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: இறால் - அரை கிலோ, தேங்காய் - அரை கப், வரமிளகாய் - 5, பூண்டு - 4 முதல் 5 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, சோம்பு - 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன், வெங்காயம் - 1, மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், மிளகுத் தூள் - 2 ஸ்பூன், கரம் மசாலா - 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இறாலை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் தேங்காய், வரமிளகாய், சோம்பு, பூண்டு மற்றும் கறிவேப்பிலையை மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து மசாலா பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த இறால், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

அதன்பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இறுதியாக மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான இறால் சுக்கா மசாலா தயார்.

சூடான சாதம், சப்பாத்தி அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இந்த இறால் சுக்கா மசாலா அசத்தலான சுவையை தரும்.

மொறுமொறு உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா.. மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி..!