கவலைய விடுங்க ..வாஷிங் மிஷினை எளிதாக சுத்தம் செய்யும் முறை!

தினத்தந்தி

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் முக்கியமான மின்சாதனங்களில் வாஷிங் மிஷின் ஒன்றாகும். துணிகளில் உள்ள அழுக்குகளை நீக்கும் இந்த இயந்திரத்திலேயே காலப்போக்கில் அழுக்கு, சோப்பு படிவு மற்றும் துர்நாற்றம் உருவாகலாம். எனவே வாஷிங் மிஷினை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.

வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி வாஷிங் மிஷினை சுத்தமாக வைத்திருக்கலாம். குறிப்பாக சமையல் சோடா மற்றும் வினிகர் போன்றவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: சமையல் சோடா, வினிகர்

சுத்தம் செய்யும் முறை: முதலில் சமையல் சோடா மற்றும் வினிகரை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேஸ்டை வாஷிங் மிஷினின் உள்புறம் மற்றும் அழுக்கு படிந்த பகுதிகளில் தடவ வேண்டும்.

அதை சுமார் 15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். அதன் பிறகு ஸ்க்ரப்பர் கொண்டு மெதுவாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து மிஷினை முழுவதும் துடைத்து விடலாம்.

மற்றொரு எளிய முறை: முதலில் 1 முதல் 2 லிட்டர் தண்ணீரை வெதுவெதுப்பாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். அதில் 2 அல்லது 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இந்த கலவை ஆறிய பிறகு, ஒரு மென்மையான துணியை அதில் நனைத்து வாஷிங் மிஷினின் வெளிப்புறம் மற்றும் உள்ள்புறத்தை துடைக்கலாம். இதனால் படிந்துள்ள அழுக்கு மற்றும் துர்நாற்றம் நீங்கும்.

வாஷிங் மிஷினை அடிக்கடி சுத்தம் செய்து வந்தால் அது நீண்ட நாட்கள் நன்றாக செயல்படும். மேலும் துணிகளும் சுத்தமாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும்.

கோடையில் டீ, காபி குடிப்பது சரியா? உண்மை மற்றும் தவறான நம்பிக்கைகள்!