சம்மர் ஸ்பெஷல்.. ஜில்லுனு ஆரஞ்சு ஐஸ்கிரீம்!

தினத்தந்தி

அடிக்கும் வெயிலில் ஐஸ்கிரீம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த ஆரஞ்சு ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிதாக செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: பால்- 1 லிட்டர், ஆரஞ்சு பழம்-3, பாதாம், முந்திரி- 10 ஆகியவை.

செய்முறை: முதலில் ஒரு முழு ஆரஞ்சு பழத்தை எடுத்து அதன் மேல் பகுதியை வட்டமாக வெட்டி எடுக்கவும். அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மெதுவாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆரஞ்சு தோல் உடையாமல் முழுமையாக இருக்க வேண்டும்.

இதற்கிடையில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பாலை சேர்க்கவும். அதில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து, பாலை அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.

கடாயின் ஓரங்களில் படியும் பாலைக் கரண்டியால் எடுத்து மீண்டும் பாலில் சேர்த்து விடவும். பால் சுண்டி, பால்கோவா பதத்திற்கு முன்பான கிரீம் பதம் வரும் வரை காய்ச்சவும்.

பின்னர் கிரீம் பதம் வந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் பாலாடை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுப்பை அணைத்து இந்த கலவையை 15 நிமிடம் ஆற விடவும். இது இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்திற்கு மாறும்.

இப்போது எடுத்துக் வைத்துள்ள ஆரஞ்சு சதைப்பகுதியிலிருந்து விதைகளை நீக்கி, அதன் ஜூஸை ஒரு பாத்திரத்தில் பிழிந்து எடுக்கவும்.

இந்த ஜூஸை தயாரித்த பால் கிரீமில் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் இந்த கலவையை ஆரஞ்சு தோலின் உள்ளே மெதுவாக ஊற்றவும்.

மேலே வெட்டி எடுத்த பகுதியை வைத்து மூடி, இதை ஃப்ரீசரில் சுமார் 2½ மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

ஃப்ரீசரில் இருந்து எடுத்து, வட்டமாக துண்டுகளாக வெட்டி பரிமாறவும். சுவையான, குளிர்ச்சியான ஆரஞ்சு ஐஸ்கிரீம் தயார்!

குறிப்பு :ஆரஞ்சு ஜூஸை சூடான பாலில் சேர்க்காமல், பால் ஆறிய பிறகு சேர்க்க வேண்டும். இல்லையெனில் பால் கெட்டியாகும்.

மாலை தேநீர் நேரத்துக்கு சூப்பர் ரவா வடை செய்வது எப்படி?