தினத்தந்தி
ஆட்டுக் கால் சூப் குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக குளிர்காலங்களில் உடலை சூடாக வைத்திருக்கவும், மூட்டு வலியை குறைக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் இந்த சூப் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
தேவையான பொருட்கள்: ஆட்டுக் கால்கள் - 2, வெங்காயம் - 1 (நறுக்கியது), பூண்டு - 2 முதல் 3 பல், இஞ்சி - சிறிதளவு, இலவங்கப்பட்டை - சிறிது, கிராம்பு - 2 முதல் 3, கொத்தமல்லித் தூள் - அரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - தேவையான அளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: முதலில் ஆட்டுக் கால்களை சுத்தமான தண்ணீரில் 2 முதல் 3 முறை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு, சிவப்பு மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அதனுடன் கொத்தமல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் பிரஷர் குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி, கழுவிய ஆட்டுக்கால்களை 2 நிமிடங்கள் வதக்கவும். அதன்பின் அரைத்த மசாலா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி 5 முதல் 6 விசில் வரும் வரை வேகவிடவும். அழுத்தம் குறைந்ததும் மூடியை திறந்து, சூப்பை வடிகட்டிக்கொள்ளவும்.
பரிமாறும் போது மேலே கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறலாம்.
ஞாயிற்றுக்கிழமை அசைவ விருந்துக்கு இந்த ஆட்டுக்கால் சூப் சிறந்த தேர்வாக இருக்கும். வீட்டிலேயே எளிதாக செய்து குடும்பத்துடன் சுவைத்து மகிழுங்கள்!