தினத்தந்தி
தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் தக்காளித் தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 10, பெரிய தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், கடுகு – 1 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.
அரைக்க : மல்லி (தனியா) - 1 டீஸ்பூன், புளி - பெரிய எலுமிச்சை அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 , உப்பு - தேவையான அளவு ஆகியவை.
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயை கழுவி அடிப்பகுதி வரை நான்காக கீறி வைத்துக் கொள்ளவும்.
தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை கத்திரிக்காயின் உள்ளே வைத்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக கரைய வதக்கவும். அதன் பிறகு ஊற வைத்த கத்திரிக்காயை சேர்த்து மெதுவாக கிளறவும்.
சிறிது தண்ணீர் தெளித்து, மீதமுள்ள அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து சிம்மில் வேக விடவும்.
கத்திரிக்காய் உடையாமல் மெதுவாக புரட்டி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். சுவையான கத்திரிக்காய் தக்காளி தொக்கு தயார்.