தினத்தந்தி
உலகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலந்தி இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 1,800 வகையான சிலந்திகள் இந்தியாவில் வாழ்கின்றன. எட்டுக்கால் கொண்ட உயிரினமான சிலந்தி, பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
சிலந்தியை பொதுவாக பூச்சி என்று அழைத்தாலும், அது உண்மையில் பூச்சி இனத்தைச் சேர்ந்தது அல்ல. காரணம், பூச்சிகளுக்கு இருப்பது போல் உணர்வுக் கொம்புகளோ அல்லது இறக்கைகளோ சிலந்திகளுக்கு கிடையாது.
சிலந்திகளுக்கு 6 முதல் 8 கண்கள் வரை இருக்கும். மேலும், ஆண் சிலந்திகளை விட பெண் சிலந்திகள் உருவத்திலும் எடையிலும் பெரியதாக காணப்படுகின்றன.
சிலந்திகள் பெரும்பாலும் அதிகாலை அல்லது மாலை நேரங்களில்தான் வலை பின்னுகின்றன. இந்த நேரங்களில் பூச்சிகள் அதிகமாக பறந்து திரிவதால் அவற்றை எளிதில் பிடிக்க முடிகிறது.
சிலந்தி வலைகள் பொதுவாக வட்ட வடிவம் அல்லது எண்கோண வடிவத்தில் அமைக்கப்படுகின்றன. வயிற்றுப் பகுதியில் உள்ள சிறப்பு சுரப்பிகளில் இருந்து வெளியேறும் திரவம் காற்றுடன் சேரும்போது மெல்லிய நூலாக மாறி வலையாக உருவாகிறது.
சிலந்தி வலையின் ஒரு பகுதி பூச்சிகளை ஒட்டவைக்கும் தன்மை கொண்டதாகவும், மற்றொரு பகுதி ஒட்டாத தன்மை கொண்டதாகவும் இருக்கும். இதனால் வலையில் சிக்கும் பூச்சிகள் தப்பிக்க முடியாமல் போகின்றன.
பெரும்பாலான சிலந்திகள் தோட்டங்கள் மற்றும் காடுகளில் இரையை எதிர்பார்த்து காத்திருக்கும். வீட்டுச் சிலந்திகள் மட்டும் வலையின் நடுவில் இருந்து இரை சிக்குவதை கவனித்து காத்திருக்கும்.
விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொண்டு பயிர்களை பாதுகாக்கும் பணியை சிலந்திகள் செய்கின்றன. அதேபோல் ஈ, கொசு போன்ற நோய் பரப்பும் பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதால், சிலந்திகள் இயற்கையின் முக்கியமான நண்பர்களாக கருதப்படுகின்றன.