தினத்தந்தி
அத்திப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் கொண்ட அத்திப்பழத்தை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: காய்ந்த அத்திப்பழம் – 15, நெய் – கால் கப், பாதாம் மற்றும் முந்திரி (ஊறவைத்து தோலுரித்து பொடித்தது) – அரை கப், சர்க்கரை – முக்கால் கப், பால்பவுடர் – முக்கால் கப், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், குச்சியாக நறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன், வறுத்த முந்திரி – 12, கிஸ்மிஸ் – 12.
செய்முறை: இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் காய்ந்த அத்திப்பழங்களை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும். அத்திப்பழம் மென்மையானதும் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும், பொடித்த பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
அதன்பின் அரைத்த அத்திப்பழ விழுது, பால்பவுடர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
கலவை அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து சுமார் 5 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா பதத்திற்கு இறுகத் தொடங்கியதும் ஏலப்பொடியை தூவி கலக்கவும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மேலே நறுக்கிய பாதாம், வறுத்த முந்திரி மற்றும் கிஸ்மிஸை தூவி அலங்கரித்து பரிமாறவும்.