தஞ்சாவூர் ஸ்பெஷல் சூரியகலா ஸ்வீட்..வீட்டிலேயே செய்வது எப்படி?

தினத்தந்தி

தஞ்சாவூரின் பிரபலமான இனிப்பு வகைகளில் சூரியகலாவும் ஒன்று. கோவா பூரணத்துடன் தயாரிக்கப்படும் இந்த சுவையான ஸ்வீட்டை வீட்டிலேயே எளிதாக செய்து பார்க்கலாம். பாம்பே ஸ்வீட்ஸ் என்றாலே சந்திரகலா, சூரியகலா ஸ்வீட்ஸ் நினைவுக்கு வரும் அளவுக்கு இந்த இனிப்பு பிரபலமானது.

தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, கோவா - 1 கப், முந்திரி மற்றும் பாதாம் - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: முதலில் சூரியகலாவுக்குத் தேவையான கோவா பூரணத்தைத் தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோவாவை சேர்த்து, அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நெய்யில் வறுத்து உடைத்த முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து பூரணமாகத் தயார் செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு சர்க்கரை மற்றும் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சுமார் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

தயார் செய்த மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, பூரிக்கு உருட்டுவது போல சிறிய வட்டங்களாகத் தேய்த்துக் கொள்ளவும். ஒரு மாவு வட்டத்தின் நடுவில் தயாரித்து வைத்துள்ள கோவா பூரணத்தை வைத்து, அதன் மேல் மற்றொரு மாவு வட்டத்தை வைத்து மூடவும்.

பின்னர் ஓரங்களை சிறிது தண்ணீர் தடவி நன்றாக ஒட்டவும். ஓரங்களை கைமுருக்கு செய்வது போல மடித்து அழகாக வடிவமைக்கவும். இதேபோல் அனைத்து மாவு உருண்டைகளையும் சூரியகலா வடிவில் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் தயாரித்து வைத்துள்ள சூரியகலாக்களைப் போட்டு பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

அடுத்து சர்க்கரை பாகு தயாரிக்க ஒரு வாணலியில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சர்க்கரை பாகு கையில் தொட்டுப் பார்த்தால் பிசுபிசுப்பாக இருக்கும் பதத்திற்கு வந்தால் போதும்; கம்பிப் பதம் தேவையில்லை.

பொரித்து வைத்துள்ள சூரியகலாக்களை சர்க்கரை பாகில் சேர்த்து நன்றாகப் புரட்டவும். சுமார் 5 நிமிடங்கள் பாகில் ஊறவைத்து, சர்க்கரை பாகு முழுவதும் சூரியகலாவில் நன்றாகப் படிந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.

தஞ்சாவூர் ஸ்பெஷல் சுவையான சூரியகலா ஸ்வீட் தயார். சூடான தேநீர் அல்லது காபியுடன் பரிமாறினால் அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான கேரட் சாதம்!