தினத்தந்தி
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மீண்டும் சேகரிக்கப்படாமல் குப்பைகளாக மாறுகின்றன.
சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒரு மனிதன் தனது வாழ்நாளில் கணிசமான அளவு மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறான் என்று கூறப்படுகிறது. வீடுகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கும் போது, குறிப்பாக வெயிலில் வைத்தால் அதிலிருந்து டையாக்ஸின் போன்ற நச்சுப்பொருட்கள் வெளியேறக்கூடும். அந்த தண்ணீரை குடிப்பது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிஸ்பீனால்-ஏ (BPA) என்ற ரசாயனம் ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடும். இது நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் முன்கூட்டிய பருவமடைதல் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கக்கூடும். தொடர்ந்து பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் குடிப்பதால் உடலின் இயல்பான பாதுகாப்பு திறன் குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும், சில பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள பித்தலேட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் கல்லீரல் பாதிப்பு மற்றும் பிற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாட்டில் தண்ணீரில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகச் சிறிய இந்த பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்லும் போது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.