தினத்தந்தி
நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் சென்று மனது கொஞ்சம் கவலையாக இருக்கிறது எனக்கூறினால், பலரின் அறிவுரை "வெளியே சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்பதுதான். பலரும் இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
நீண்ட தொலைவு பயணம் செய்வது மனதுக்கும், உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாம். தொலைதூர பயணத்தால் நாம் பெறும் பலன்கள் குறித்து பார்ப்போம்.
அதிகப்படியான தனிமை ஒருவித வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும். எதன்மீதும் ஆர்வம் இருக்காது. இந்த மனநிலையில் இருந்து மாற்றம் தேவை என்றால், இந்த அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் ஒரு பயணம் அவசியம்.
அது நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வதாகவும் இருக்கலாம். இயற்கை சூழலில் நமது மனமும், உடலும் ஓய்வெடுக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் மன அழுத்தம் குறையும். மேலும் பயணம் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகரிக்கும்.
இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுவது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது. இது இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, கவனத்தை மேம்படுத்துகிறது.
பூங்காக்கள் மற்றும் பசுமையான இடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறைவான மன உளைச்சலைக் கொண்டுள்ளனர். அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர். மேலும் நீண்ட ஆயுட்காலத்தை கொண்டுள்ளனர்.