தினத்தந்தி
ஷிகெல்லா என்பது ஷிகெல்லோசிஸ் எனப்படும் குடலில் நோய்த்தொற்றை உண்டாக்கும், எளிதில் பரவக்கூடிய ஒரு வகை பாக்டீரியாவாகும். பெரும்பாலும் கோடை காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் இடைப்பட்ட பருவமான இலையுதிர் காலத்தின் தொடக்கத்தில் அதிகமாக பரவும்.
நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் மலத்தில் கிருமி வெளியேற்றப்படுவதால், தீவிர வயிற்றுப் போக்குக்கு ஆளாகுபவர்கள். கழிப்பறைக்கு சென்று வந்த பிறகு கைகளை 'ஹேண்ட் வாஷ்' கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஏராளமான திரவங்களை அருந்தி, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதே முக்கியமானது. நோயின் கால அளவை குறைப்பதற்கும், பாக்டீரியா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
கிருமித்தொற்று ஏற்பட்ட ஒன்று முதல் ஏழு நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தோன்றும்.
கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படலாம். காய்ச்சல், வயிற்றுப்பிடிப்பு மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல் அல்லது சளி போன்ற பாதிப்புகள் காணப்படும்.
சிலருக்கு ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் கடுமையான தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி, தொடர்ந்து மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உண்டாகும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் வெளிப்படாமல் இருக்கலாம்.
ஷிகெல்லா நோயை உண்டாக்குவதற்கு மிக குறைந்த எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களே தேவைப்படுவதால், மிக எளிதாக பரவிவிடுகிறது. நோய் பாதிப்புக்குள்ளான நபர் தயாரித்த உணவை கைகளை முறையாக சுத்தம் செய்யாமல் உண்பதன் மூலமோ அல்லது அவர் பயன்படுத்திய டம்ளரில் தண்ணீரை பருகுவதன் மூலமோ பரவக்கூடும்.
நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுத்திகரிக்கப்படாத நீரை தவிர்க்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது வீட்டிலேயே இருப்பதன் மூலம் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு நோய் பரப்புவதையும் தடுக்கலாம்.