தினத்தந்தி
மாங்காய்: மாங்காய்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்துவதோடு குடல் ஆரோக்கியத்தையும் ஊக்கு விக்கும்.
மேலும் மாங்காய்களில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு மாங்காய் சிறந்த தேர்வாக அமையும். கோடை காலத்தில் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் மாங்காய் உதவிடும்.
செரிமானப் பிரச்சினைகள் உள்ளவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புபவர்கள், புளிப்புச்சுவையுள்ள உணவுகளை விரும்புபவர்கள், கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்புபவர்கள் மாங்காய் சாப்பிடலாம்.
மாம்பழம்; பழுத்த மாம்பழங்கள் இனிமையாகவும், சாறு நிறைந்ததாகவும், ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும் திகழ்கின்றன. அதிலிருக்கும் வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்த உதவும்.
மாம்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
சரும மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்கள், இனிப்பான பழங்களை விரும்பி உண்பவர்கள் மாம்பழத்தை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பழுத்த மாம்பழத்தை மிதமான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து வேறுபாடுகள்: மாங்காயில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும். பழுத்த மாம்பழங்களில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் வைட்டமின் ஏ மிகுந்திருக்கும்.
மாம்பழம் மற்றும் மாங்காய் இரண்டுமே கோடைகாலத்தின் வரப்பிரசாதங்கள். சுவைக்கு மாம்பழமும், ஆரோக்கிய நன்மைகளுக்கு மாங்காயும் சிறந்தது. உங்கள் உடலின் தேவை மற்றும் சுவையைப் பொறுத்து இரண்டையும் மிதமான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.