உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்களி!

தினத்தந்தி

கருப்பு உளுந்தில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்தி, மூட்டுவலி மற்றும் உடல் சோர்வை குறைக்க உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உளுந்தங்களி மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.

மேலும், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளுக்கும் இது நல்ல நிவாரணமாக இருக்கும். ரத்தச்சோகை மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து - 1 கப், கவுனி அரிசி - 1/4 கப், ஏலக்காய் - 2, நாட்டுச்சர்க்கரை - 1½ கப், நல்லெண்ணெய் - 1 கப்.

செய்முறை: முதலில் கருப்பு உளுந்தும் கவுனி அரிசியும் நன்றாக கழுவி சிறிது நேரம் உலர விடவும். பின்னர் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து, ஏலக்காயுடன் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவில் 3 கப் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். கெட்டியானதும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும்.

அல்வா பதம் வந்ததும் நல்லெண்ணெயை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். எண்ணெய் பிரிந்து, களி கடாயில் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான உளுந்தங்களி தயார். விருப்பப்பட்டால் நாட்டுச்சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது கருப்பட்டியும் சேர்க்கலாம்.

செக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவையும் ஆரோக்கியமும் மேலும் அதிகரிக்கும்.

ஞாயிறு ஸ்பெஷல்: சுவையான ஆட்டுக் கால் சூப்!