தினத்தந்தி
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது.
மேகங்கள் சூழ்ந்து வெள்ளியால் வார்க்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதால் இதற்கு ‘வெள்ளியங்கிரி’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த மலை ஏழு சிகரங்களை கொண்டதாகும். அதில் ஏழாவது மலையில்தான் வெள்ளியங்கிரிநாதர் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த மலை சிவபெருமானின் காலடிப்பட்ட மலை என்றும், அவர் தன் மனைவி பார்வதியுடன் சில காலம் இங்கு தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த இடம் “தென்னக கயிலாயம்” என்று அழைக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரிநாதர் கோவில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலை ஏழு சிகரங்களை கொண்டுள்ளது.
சுமார் 6 கிலோமீட்டர் தூரம் செல்லும் மலையேற்றப் பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற புனித இடங்கள் உள்ளன.
மலையின் அடிவாரப் பகுதி பூண்டி என்று அழைக்கப்படுகிறது. அங்கு வெள்ளியங்கிரிநாதர், சவுந்திரநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். அவர்களுடன் விநாயகர், முருகப்பெருமான் உள்ளிட்ட பல தெய்வங்களின் சிலைகளும் காணப்படுகின்றன.
வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது சிகரத்தில் உள்ள குகையில் சுயம்பு லிங்க வடிவில் உள்ள இறைவனை பக்தர்கள் தரிசிக்கின்றனர். இதற்காக கடினமான மலையேற்றப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஆதிசங்கரர் வழிபட்ட புனித தலமாகவும் இது போற்றப்படுகிறது. மேலும் சிவபெருமானே வந்து தவம் செய்த இடம் என்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாக இங்கு தவம் புரிந்ததாகவும் கூறப்படுகிறது.