தினத்தந்தி
பயோட்டின்; முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய வைட்டமினாக பயோட்டின் அமைந்திருக்கிறது. முடி உதிர்வு, முடி எளிதில் உடைவது, முடி வளர்ச்சி மெதுவாக நடப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் பயோட்டின் குறைபாடும் அதற்கு காரணமாகும்.
முட்டை, நட்ஸ், விதைகள், சால்மன் மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் பயோட்டின் இயற்கையாகவே காணப்படுகிறது. உணவு மூலம் போதுமான அளவு பயோட்டின் கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பயோட்டின் சப்ளிமென்டுகள் சாப்பிடுவது நல்லது.
வைட்டமின் டி; இந்த வைட்டமின் புதிய மயிர்க்கால்களை உருவாக்க உதவும். அடர்த்தியான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை விரும்பினால் வைட்டமின் டி அவசியமானது. நம்மில் பலர் போதுமான அளவு சூரிய ஒளியை பெறுவதில்லை என்பதால், வைட்டமின் டி குறைபாடு உண்டாகிறது.
வைட்டமின் டி அளவை அதிகரிப்பதற்கான எளிதான வழி, வாரத்தில் ஒருசில நாட்களாவது 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரம் செல விடுவதாகும். மீன்கள், காளான்கள், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மூலமாகவும் வைட்டமின் டி-யை பெறலாம்.
வைட்டமின் சி; இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு முடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கொலாஜனை உற்பத்தி செய்ய தூண்டும். முடியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் புரதமாகவும் விளங்கும். முடி உதிர்வதைத் தடுப்பதற்கும் உதவி செய்யும்.
சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, குடைமிளகாய் மற்றும் புரோக்கோலி ஆகியவற்றில் இருந்து வைட்டமின் சி பெறலாம். அடர்த்தியான, வலுவான கூந்தலைப் பெற விரும்பினால், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது அவசியமானது.
வைட்டமின் ஏ; முடியில் உள்ள செல்கள் உட்பட உடலிலுள்ள ஒவ்வொரு செல்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ தேவைப்படும். உச்சந்தலையை ஈரப்பதமாக வும், முடியை பளபளப்பாகவும் வைத்திருக்கும் இயற்கையான எண்ணெய்யான சீபத்தை உற்பத்தி செய்யவும் வைட்டமின் ஏ உதவும்.
கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பசலைக்கீரை உள்ளவற்றில் வைட்டமின் ஏ மிகுந்திருக்கும். அதேவேளையில் வைட்டமின் ஏ அளவு அதிகமாகி விட்டால் முடி உதிர்வையும் ஏற்படுத்தக்கூடும். எனவே அளவோடு உட்கொள்வது முக்கியமானது.