நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு: ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்!

தினத்தந்தி

விளையாட்டு உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதுடன், உடலுக்கு நல்ல களைப்பை ஏற்படுத்தி சீரான இயக்கத்தையும் வழங்குகிறது. மேலும், மனஅழுத்தத்தை குறைத்து மனநலத்தை மேம்படுத்தும் ஹார்மோன்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

தொடர்ந்து விளையாடுவதன் மூலம் பசி அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது. அதனால் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா மற்றும் தியானம் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது அவசியம்.

விளையாட்டு பயிற்சிகள் செய்ய முடியாத சூழலில், நடைப்பயிற்சி ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. நடைப்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலில் தசை பிடிப்பு மற்றும் இறுக்கத்தை ஏற்படுத்தும் லேக்டிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது.

தொடர்ந்து நடப்பதால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, செரிமான சக்தி மேம்படுகிறது. உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு உடல் வலிமையும் அதிகரிக்கிறது.

அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் கிடைக்கும் தூய்மையான காற்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.

அதிகாலையில் எழும் பழக்கம் சோம்பலை குறைத்து, மாணவர்களின் கவனத் திறனையும் மேம்படுத்துகிறது. சிறுவர்களிடமும் இந்த பழக்கத்தை மெதுவாக உருவாக்கினால், அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றத் தொடங்குவார்கள்.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்களும் வீட்டுத் தோட்டப் பணிகளில் ஈடுபடலாம். இது உடலுக்கு இயற்கையான பயிற்சியை வழங்குவதோடு மனநிறைவையும் தருகிறது.

மேலும், வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் ஆரோக்கியமான உணவை வழங்குவதால், தோட்டப் பணி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் இரட்டை நன்மையை அளிக்கிறது.

வேகமாக பரவும் ஷிகெல்லா நோய் தொற்றும்..தற்காப்பு நடைமுறைகளும்!