சத்துக்கள் நிறைந்த வால்நட் ராகி சாக்லேட் கேக் செய்வது எப்படி?

தினத்தந்தி

கேழ்வரகில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி3 உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அந்த வகையில், கேழ்வரகு மாவைப் பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் சுவையான வால்நட் ராகி சாக்லேட் கேக் செய்யலாம்.

தேவையான பொருட்கள்: ராகி மாவு – ¾ கப், கோதுமை மாவு – ¾ கப், கோகோ பவுடர் – ¼ கப், உப்பு – தேவையான அளவு, பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – 1 கப், காபித்தூள் – 1 ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், வினிகர் – 1 ஸ்பூன், வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன், டார்க் சாக்லேட் – 200 கிராம், கிரீம் – 150 மி.லி., வால்நட் – ½ கப்.

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகச் சலித்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை, காபித்தூள், வினிகர் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதனுடன் எண்ணெய், தயிர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

இப்போது இந்தக் கலவையை மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். அதனுடன் நறுக்கிய வால்நட் மற்றும் துருவிய டார்க் சாக்லேட் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.

ஒரு கேக் டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து, தயார் செய்த கேக் கலவையை அதில் ஊற்றவும். ஏற்கெனவே 10 நிமிடங்கள் சூடாக்கிய குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து, அதன் மீது கேக் டிரேயை வைக்கவும்.

குக்கரை மூடி மிதமான தீயில் சுமார் 45 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் ஒரு குச்சியை கேக்கின் நடுவில் செருகி எடுத்துப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

கேக் நன்றாக ஆறியதும் விரும்பிய வடிவில் வெட்டி பரிமாறலாம். சுவையான வால்நட் ராகி சாக்லேட் கேக் தயார்!

சத்தான கேரட் முட்டை பொரியல் செய்வது எப்படி?