தினத்தந்தி
டிஜிட்டல் யுகம் குழந்தைகளுக்கு கண் பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது. பள்ளி பருவத்திலேயே பல குழந்தைகள் கண் கண்ணாடி அணிந்து வருகின்றனர்.
கண் தொடர்பான விஷயங்களில் நாம் என்ன தவறு செய்கிறோம், ஸ்மார்ட்போன் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது, குழந்தைகளின் பார்வைக் குறைபாட்டை எப்படி கண்டறிவது என்பதை பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன் மிகவும் சாதாரணமாக உள்ளது.
உணவு ஊட்டவும், பொழுதுபோக்கிற்காகவும் பெற்றோர்களே இதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் அதைப் பெரிதும் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கின்றனர்.
இது பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்குகிறது. கண்களில் நீர் வறட்சி (dry eyes), கண் எரிச்சல், தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு (red eye) போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அதனால் குழந்தைகளை கண்காணித்து, போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, வருடாந்திர கண் பரிசோதனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
எப்படி கண்டறிவது? இயல்பை விட பொருட்களை மிக அருகில் வைத்து பார்ப்பது, படிப்பது, டி.வி.யை மிக நெருங்கி பார்ப்பது, நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீரென படிக்க முடியாமல் போவது, கண்களில் நீர் கசிவு, தலைவலி, சிவந்த கண்கள் போன்றவை கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
பரிசோதனை எப்போது செய்யலாம்? மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை அவசியம். உடல் வளர்ச்சியைப் போலவே, வயதிற்கு ஏற்ற கண் வளர்ச்சியும் முக்கியம்.
10 மாதத்திற்கு முன்பாகவே பிறக்கும் ‘பிரி-மெச்சூர்’ குழந்தைகளுக்கு ரெட்டினல் பரிசோதனை மிகவும் அவசியம். வெளிச்சத்தை உணர்கிறார்களா, அம்மாவை அடையாளம் காண்கிறார்களா போன்றவற்றை ஆரம்பத்திலேயே பரிசோதிக்க வேண்டும்.