சமையலுக்கு சிறந்தது நாட்டு தக்காளியா..? ஹைபிரிட் தக்காளியா..?

தினத்தந்தி

சமையலில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் தக்காளி முக்கியமானது. கிட்டத்தட்ட எல்லா வகை உணவுகளிலும் தக்காளி இடம்பிடிக்கிறது. சந்தையில் பொதுவாக நாட்டு தக்காளி மற்றும் ஹைபிரிட் தக்காளி என்ற இரண்டு வகைகள் அதிகமாக கிடைக்கின்றன.

பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரி தோன்றினாலும், சுவை, அளவு, தோலின் தடிமன், ஊட்டச்சத்து ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்.

ஹைபிரிட் தக்காளி : இரண்டு அல்லது பல்வேறு தக்காளி வகைகளை இணைத்து விஞ்ஞான முறையில் உருவாக்கப்படுபவை ஹைபிரிட் தக்காளிகள். இவை அதிக விளைச்சலை தரக்கூடியவை. மேலும் எளிதில் அழுகாது, சேதமடையாது என்பதால் விற்பனைக்கு ஏற்றதாக இருக்கும்.

இவை பொதுவாக உருண்டை வடிவத்தில் இருக்கும். பெரும்பாலும் எல்லா தக்காளிகளும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டிருக்கும். முழுவதும் சிவப்பு நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். இதன் சுவை குறைந்த புளிப்புடன் சற்று இனிப்பாக இருக்கும். அமிலத்தன்மையும் குறைவாக இருக்கும்.

நாட்டு தக்காளி : தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் இயற்கை சூழலில் விளைவித்து வரும் தக்காளிகள் நாட்டு தக்காளி எனப்படுகின்றன. இவை அதிக மரபணு மாற்றத்துக்கு உட்படாதவை.

பழுத்த தக்காளியில் இருந்து விதைகளை எடுத்து பக்குவப்படுத்தி மீண்டும் பயிரிடப்படுபவை. இவை முற்றிலும் உருண்டை வடிவத்தில் இருக்காது; சற்றே சீரற்ற வடிவத்தில் காணப்படும்.

நாட்டு தக்காளி அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு-சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் பச்சை, பச்சை-சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களிலும் காணப்படும்.

ஊட்டச்சத்து வேறுபாடு : நாட்டு தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். ஹைபிரிட் தக்காளியில் அதன் வகையைப் பொறுத்து மிதமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

மேலும், நாட்டு தக்காளியில் லைக்கோபீன் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக காணப்படும். ஹைபிரிட் தக்காளியில் அதன் அளவு வகையைப் பொறுத்து மாறுபடும். இரண்டிலும் நார்ச்சத்து போதுமான அளவில் உள்ளது.

எது சமையலுக்கு சிறந்தது? புளிப்பு சுவை மற்றும் இயற்கையான மணம் அதிகமாக இருப்பதால் சாம்பார், ரசம், குழம்பு போன்ற சமையல்களுக்கு நாட்டு தக்காளி சிறந்ததாக கருதப்படுகிறது.

அதே நேரத்தில் சாலட், சாஸ் அல்லது நீண்ட நேரம் கெடாமல் இருக்க வேண்டிய சமையல்களுக்கு ஹைபிரிட் தக்காளி பயன்படுத்தப்படுகின்றது. மொத்தத்தில், சுவை மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையில் நாட்டு தக்காளி சிறந்ததாக பலர் கருதுகின்றனர்.

வீட்டில் LPG கேஸ் மிச்சப்படுத்த சில எளிய வழிகள்!