தினத்தந்தி
எல்லோரும் எப்போதும் பளிச்சென்று தோன்றவும், தன்னிடம் இருந்து நல்ல மணம் வரவும் விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு மாறாக, உடலில் இருந்து வியர்வை காரணமாக நாற்றம் வரும் பிரச்சினை பலருக்கும் உள்ளது.
கோடைக்காலத்தில் இந்த பிரச்சினை அதிகமாகும். அதிக வெப்பம் காரணமாக உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. அதை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டால், உடலில் துர்நாற்றம் உருவாகிறது.
நமது உடலில் இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள் உள்ளன. ஒன்று ஏக்ரைன் சுரப்பிகள், இது உடல் முழுவதும் காணப்படும் சாதாரண வியர்வையை உற்பத்தி செய்கிறது. மற்றொன்று அப்போகிரைன் சுரப்பிகள், இது அக்குள், பிறப்புறுப்பு பகுதி, மார்பு போன்ற இடங்களில் காணப்படுகிறது.
இந்த அப்போகிரைன் சுரப்பிகள் வயதுக்கு வந்த பிறகே அதிகமாக செயல்பட தொடங்குகின்றன. இதனால் தான் இளமைக் காலத்தில் வியர்வை நாற்றம் அதிகமாக உணரப்படுகிறது.
வியர்வை தானாகவே நாற்றம் இல்லாதது. ஆனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் வியர்வையுடன் சேரும்போது, அது ரசாயன மாற்றம் அடைந்து துர்நாற்றத்தை உருவாக்குகிறது.
மேலும், சேபேஷியஸ் (sebaceous) சுரப்பிகளில் இருந்து வரும் எண்ணெய் கலந்த திரவமும் இதனுடன் சேர்ந்து, உடலில் அதிக நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் தான், வியர்வையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், சரியான சுத்தம் மற்றும் பராமரிப்பு மிகவும் அவசியம்.