தினத்தந்தி
நண்பர்களுடன் வெளியே சென்று ஜாலியாக இருப்பீர்கள். ஆனால் இரவு வீட்டுக்கு வந்து கதவைச் சாத்திவிட்டு தனியாக உட்காரும்போது, திடீரென மனதுக்குள் ஒரு பெரிய அமைதியும், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு மனக் களைப்பும் ஏற்படும்.
இவ்வளவு நேரம் நன்றாகத்தானே இருந்தோம், பிறகு ஏன் திடீரென இப்படி ஆகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கியமான காரணத்தை ‘சமூக ஆற்றல் குறைதல்’ என்று சொல்லலாம்.
நாம் வெளியே சென்று நாலு பேருடன் பேசும்போது, அவர்களின் உடல் மொழியைக் கவனிப்போம். சிரிப்போம், சரியான வார்த்தைகளைத் தேர்வு செய்து பேசுவோம். இவை அனைத்தையும் நமது மூளை தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கும்.
வெளியில் பார்க்கும்போது நாம் ஜாலியாக இருப்பது போலத் தெரிந்தாலும், பின்னணியில் நமது மூளை தொடர்ந்து பல்வேறு தகவல்களைச் செயல்படுத்திக்கொண்டே இருக்கும். இதனால் ஒரு கட்டத்தில் சமூக தொடர்புகளால் மனதளவில் களைப்பு ஏற்படலாம்.
தொடர்ந்து பலருடன் பேசிக்கொண்டிருந்த பிறகு, திடீரென யாரிடமும் பேசப் பிடிக்காமல் போகலாம். அப்போது நம்மை நாமே தவறாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இயல்பானதாக இருக்கலாம்.
நீண்ட நேரம் கூட்டத்தில் இருப்பது சிலருக்கு அதிகமான மனச் சோர்வை ஏற்படுத்தும். குறிப்பாக தொடர்ந்து பேசுவது, கவனிப்பது, பிறரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடப்பது போன்றவை மனதுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம்.
அதனால் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது, நடுவில் சிறிது நேரம் தனியாக இருப்பதற்கு முயற்சி செய்யலாம். ஐந்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தண்ணீர் குடித்து, மெதுவாக மூச்சை இழுத்து விடுவது போன்றவை ஓய்வெடுக்க உதவலாம்.
எனவே, நண்பர்களுடன் நன்றாகப் பேசிவிட்டு வீட்டுக்கு வந்ததும் அமைதியாக இருக்க வேண்டும் என்று தோன்றினால், உங்களை நீங்களே குறை சொல்ல வேண்டாம். உங்கள் மனதுக்கும் ஓய்வு தேவைப்படலாம். அந்த நேரத்தை அமைதியாகக் கழித்து, உங்களை நீங்களே கவனித்துக்கொள்வது நல்லது.