விநாயகர் சதுர்த்தியில் கொழுக்கட்டை படைக்க இதுதான் காரணமா?
தினத்தந்தி
ஞானபாலி என்பவன் சத்தியமே வடிவான உத்தம அரசன். முழுமுதற் கடவுளான கணபதியின் தீவிர பக்தன். விநாயகரின் பக்தனாக நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை அவனது நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்களைக் காக்கும் பொருட்டு, ராஜகுருவின் ஆலோசனைப்படி ருத்ர யாகம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான் ஞானபாலி.
யாகத்தின் நடுவே அரசனின் விதி தனது வேலையைத் தொடங்கியது. அந்த வழியே சென்ற மேனகை, ஞானபாலியின் கண்களைக் கவர்ந்தாள். சிற்றின்ப ஆசையால் அரசன் வேள்வியைப் பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து, மேனகையின் பின்னே சென்றான். பின்னால் வந்த அரசனை எச்சரித்துவிட்டு மேனகை மறைந்தாள்.
ஏமாந்துபோன அரசன் ஞானபாலி மீண்டும் யாகம் நடைபெற்ற இடத்துக்குத் திரும்பினான். யாகம் பாதியில் நின்றதால் பெரும் ஆபத்து நேரும் என்று ராஜகுரு எச்சரித்தார். எனவே, மற்றொரு நாள் யாகத்தைத் தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் நின்றுபோன யாகத்தை மீண்டும் தொடங்கினான் ஞானபாலி.
இதனால் கோபமடைந்த அஷ்ட திக் பாலர்கள் தோன்றி ஞானபாலியைச் சபித்தனர். அவர்களின் சாபத்தால் ஒற்றைக் கண் பூதமாக மாறி அலையத் தொடங்கினான் ஞானபாலி. கண்ணில் பட்ட மனிதர்களையெல்லாம் பிடித்து உண்டான். கொடிய அரக்கனாக மாறி, சகல உயிரினங்களையும் வதைத்தான். தீராத பெரும்பசியால் உயிர்களை எல்லாம் விழுங்கினான்.
பூமிக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிய ஞானபாலியை எந்தத் தேவர்களாலும் அழிக்க முடியவில்லை. அவனுக்கு கஜமுகனின் ஆசி இருந்ததே இதற்குக் காரணம் என்பதைப் பூமாதேவி அறிந்துகொண்டாள். தன் மக்களைக் காக்க கணபதியை வேண்டினாள். தன் பக்தனான ஞானபாலிக்கு அருள் செய்யவும், பூவுலகைக் காக்கவும் கணபதி திருவுளம் கொண்டார்.
கணபதியின் முன் கண்ணீரோடு விழுந்து வணங்கிய ஞானபாலி, தன்னை ரட்சித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். தனது பெரும்பசியைப் போக்குவதுடன், தன்னையும் கணநாதராகிய பிள்ளையார் தம்மோடு வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். பிறப்பிலா பெருவாழ்வைத் தந்து காக்குமாறு அழுது தொழுதான்.
திருவுள்ளம் கொண்ட கணபதி, விஸ்வரூப வடிவம் எடுத்து, ஞானபாலியைத் தன் கையால் பிடித்து, அவனை ஒரு கொழுக்கட்டை வடிவமாக்கி விழுங்கிவிட்டார். இப்படியாக கணபதியின் பக்தனான ஞானபாலி, கொழுக்கட்டை வடிவத்தில் விநாயகப் பெருமானின் வயிற்றில் அமர்ந்துகொண்டான்.
அன்றிலிருந்து விநாயகருக்குப் படைக்கப்படும் கொழுக்கட்டைகள் அனைத்தும் ஞானபாலிக்கே போய்ச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. நாமும் இன்று வரை ஞானபாலியின் நினைவாகக் கொழுக்கட்டையைச் செய்து படைத்து வருகிறோம். ஆன்மா என்ற இனிப்பான பூரணத்தைப் பொதிந்து, இந்த உடலையே ஆண்டவருக்காக அர்ப்பணிக்கிறோம் என்பதே கொழுக்கட்டையின் தத்துவம்.