முடி உதிர்வு, பொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் 4 தயிர் ஹேர் மாஸ்க்குகள்!

தினத்தந்தி

முடி உதிர்தல், பொடுகு, தலைமுடி வறட்சி போன்ற பிரச்சனைகளால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக அதிக செலவு செய்யாமல் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சில ஹேர் மாஸ்க்குகளைத் தயாரிக்கலாம்.

அந்த வகையில் தயிர் தலைமுடி பராமரிப்புக்கு உதவும் எளிய பொருளாகும். இதில் உள்ள புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் தலைமுடியை மென்மையாக்கவும், உச்சந்தலையின் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன.

தயிர் மற்றும் கற்றாழை: கற்றாழை ஜெல்லுடன் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். 25 முதல் 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசலாம். இது உச்சந்தலையை இதமாக வைத்திருக்கவும், தலைமுடியின் வறட்சியைக் குறைத்து மென்மையாகப் பராமரிக்கவும் உதவுகிறது.

தயிர் மற்றும் தேன்: தலைமுடி வறண்டு, சிக்கலாக இருந்தால் தயிருடன் சிறிதளவு தேன் கலந்து தலைமுடியின் நீளம் முழுவதும் தடவவும். சிறிது நேரம் கழித்து அலசினால், தலைமுடியில் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு மென்மையாகவும் எளிதில் சீவக்கூடியதாகவும் இருக்கும்.

தயிர் மற்றும் கறிவேப்பிலை: கறிவேப்பிலையை நன்றாக அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்துப் பசைபோல் தயாரித்து தலைமுடியில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். இந்தக் கலவை தலைமுடியைப் பராமரிக்க உதவும் எளிய வீட்டு முறையாகும்.

ஹேர் மாஸ்க்கை எப்படிப் பயன்படுத்துவது? முதலில் தலைமுடியை மெதுவாகச் சீவி சிக்கல்களை நீக்கிக் கொள்ளவும். பின்னர் தயாரித்த கலவையை விரல்களால் அல்லது பிரஷ் மூலம் தலைமுடியில் சீராகத் தடவவும்.

25 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவலாம். வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்திப் பார்க்கலாம். முதலில் சிறிய பகுதியில் தடவி ஒவ்வாமை ஏற்படுகிறதா எனச் சரிபார்ப்பதும் அவசியம்.

குறிப்பு: முடி உதிர்தல் அதிகமாக இருந்தாலோ, தொடர்ந்து பொடுகு மற்றும் அரிப்பு இருந்தாலோ தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. தயிர் ஹேர் மாஸ்க் தலைமுடி பராமரிப்புக்கு மட்டுமே உதவும்; மருத்துவச் சிகிச்சைக்கு மாற்றாகாது.

சிறுவயதிலேயே குழந்தைகளுக்குப் பற்கள் சொத்தை ஏற்படுவது ஏன்?