“கூட்டணி வெற்றிக்காக முழு தமிழ்நாட்டிலும் பிரசாரம்”- அண்ணாமலை

தினத்தந்தி

தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சித் தலைமையிடம் ஏற்கனவே எழுத்து மூலமாக தெரிவித்திருந்தேன். அதோடு, கட்சியின் முக்கிய உயர்மட்ட தலைவர்கள் அனைவரிடமும் நான் போட்டியிடவில்லை என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி கூறி வந்தேன்.

அதனால்தான் டெல்லிக்கு சென்ற பட்டியலிலும் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை. மேலிட பொறுப்பாளர், அகில இந்திய பொதுச்செயலாளர் மற்றும் தேசிய தலைவர்களுக்கும் என்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தேன்.

என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து, கட்சி தலைமையினர் என்னை பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த தேர்தலைப் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் 27 பா.ஜ.க. வேட்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் நான் பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன்.

தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க.வின் தவறுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு வலிமையாக பேசுவது என் பொறுப்பு என்று கருதுகிறேன்.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் ஒரு தொகுதியில் போட்டியிட்டேன். அதன் காரணமாக, அப்போது எங்கள் கூட்டணியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியவில்லை. அந்த மனக்குறையை தீர்க்கும் நோக்கத்தில்தான் இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

நான் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்துவதற்காக இதை தெரிவிக்கிறேன். பலர் நான் போட்டியிடாததற்கு பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாடு தேர்வு குழுவிலேயே என்னுடைய பெயர் மேல்மட்டத்துக்கு செல்லாத நிலையில், பா.ஜ.க. தலைமை எப்படி எனக்கு சீட் வழங்க முடியும்?

நான் போட்டியிட விரும்பவில்லை என்பதால், என்னை பிரசாரத்திற்கு நியமித்துள்ள கட்சி தலைமையை நான் எவ்வாறு குறை சொல்ல முடியும்? என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எனக்கு மரியாதை அளித்த தலைமையினருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி: திட்டங்கள் அறிவிப்பில் மட்டும் தானா?