தினத்தந்தி
1952-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அந்தக் கட்சி தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய கட்சியாக விளங்கியது.
இதனால், அக்கட்சியைச் சேர்ந்த ராஜாஜி முதல்-அமைச்சராக பதவி ஏற்று, பின்னர் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார். ராஜாஜியின் குலக் கல்வி திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதையடுத்து, காமராஜர் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதால், காமராஜர் மீண்டும் முதல்-அமைச்சராக ஆனார்.
1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், காமராஜர் மூன்றாவது முறையாக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அந்தத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் வலுவிழக்கத் தொடங்கியதால், 1963-ல் காமராஜர் முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி கட்சிப் பணிக்கு சென்றார்.
இதனால், அவருக்கு பதிலாக பக்தவச்சலம் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இலவச கல்வி, இலவச மதிய உணவு, சீருடை போன்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்திற்கு பல பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வந்த அந்த படிக்காத மேதை, ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்களையும் உருவாக்கி, தமிழ்நாட்டில் வேளாண்மை உற்பத்தி பெருக வழிவகுத்தார்.
காமராஜரின் ஒன்பது ஆண்டு கால ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. அவர் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும், நான்கு முறை எம்.பி.யாகவும், ஐந்து ஆண்டுகள் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றினார்.