தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும்- திருமாவளவன்

தினத்தந்தி

கொள்கை பகையை வீழ்த்துவதும், கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமையாகும்.

ஆனால், அந்தக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுப்பது தலைமைக்குரிய தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.

தற்போது நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடப்பங்கீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருடல் காரணமாக, அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அதேவேளையில், மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம் என அவர்கள் அறிவித்துள்ளனர். கமல்ஹாசனின் நாகரிகமான அணுகுமுறையை நாம் பாராட்டினாலும், அது நமது கூட்டணியின் நன்மதிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் மேலிடுகிறது.

தனி சின்னத்தில் போட்டியிட விரும்பும் கூட்டணி கட்சிகளை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடச் சொல்லுவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுயாதீனமான அரசியல் செயல்பாடுகளை முடக்கிவிடும்.

இந்த நெடுக்கடியான சூழலில், மதவாத மற்றும் வலதுசாரி அணிகளை தோற்கடிக்க மக்கள் நீதி மய்யம் தேர்தலில் நம்முடன் இணைந்து களமிறங்க வேண்டும்.

தொகுதிகளின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்கி, கூட்டணியின் மீதான நம்பிக்கையையும், அவர்களுக்கான மதிப்பையும் மேலும் உயர்த்த வேண்டும் என்று, உடன்பிறப்பின் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அப்போது தான் “வெல்வோம் ஒன்றாக” என்ற சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக நிறைவேறும்.

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!