தூத்துக்குடியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கா..?
குலசேகரபட்டிணம் :இங்கு அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையானது. இங்கு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசராப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களின் உருவங்கள் வேடம் அணிந்து பக்தா்கள் அம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.
பனிமயமாதா ஆலயம்: தூத்துக்குடி நகரின் கடற்கரை ஒரத்தில் அமைந்துள்ள பணிமயமாதா ஆலயம் கிறிஸ்தவர்களின் பிரசித்தப் பெற்ற வழிப்பாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் கி.பி. 1711 -ல் போர்த்துகீசியர்காளால் நிர்மாணிக்கப்பட்டது.
மணப்பாடு: திருச்செந்தூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 60 கி மீ தொலைவிலும் மணப்பாடு கடற்கரை அமைந்துள்ளது. மணப்பாடில் பாரம்பரிய மிக்க பல தேவாலயங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளன.
திருச்செந்தூர் முருகன் கோவில்: இது தென் இந்தியாவில் உள்ள முக்கிய புனித தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இக்கோவில் தூத்துக்குடியிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளது .
பாஞ்சாலங்குறிச்சி: தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிறிய ஊராகும். இவ்வூரில் வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவுச் சின்னம் 1974ல் தமிழக அரசால் கட்டப்பட்டது. இங்கு தீட்டப்பட்ட ஓவியங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வீர தீரங்களையும் அவர்கால வரலாற்று சான்றுகளையும் வெளிப்படுத்தும் முகமாய் அமைந்துள்ளன.
கொற்கை பழைய துறைமுகம்: சங்க காலத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சியிலிருந்து கொற்கை துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு பழங்கால பிரசித்துபெற்ற வெற்றிவேலம்மன் கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
தேரிக்காடு: தூத்துக்குடியில் உள்ள தேரிக்காடு பகுதி தமிழகத்தின் ஒரே மணல் மேடு பாலைவனம் என கூறப்படுகிறது. இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.