கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கூர்க், இயற்கையின் அழகை முழுமையாக கொண்ட ஒரு பகுதி. உள்ளூர் மொழியில் 'குடகு' என்று அழைக்கப்படுகிறது.
இந்த இடம், கண்கவர் இயற்கை காட்சிகள், அடர்ந்த காபி தோட்டங்கள், ஆரஞ்சு மற்றும் மிளகுத் தோட்டங்களால் சூழப்பட்ட ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
காவேரி ஆற்றின் பிறப்பிடம் என்ற பெருமையை கொண்ட கூர்க், அதன் அமைதியான சூழல் மற்றும் இதமான வானிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது.
இந்த இடம் இயற்கை ஆர்வலர்கள், சாகசப் பிரியர்கள் மற்றும் ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக கருதப்படுகிறது.
இங்கு வாழும் மக்களின் தனித்துவமான கலாசாரம், உடை, மொழி, உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் கூர்க்கின் பாரம்பரியத்தை இன்றும் பிரதிபலிக்கின்றன
இங்கு ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவுவதால் எந்த நேரத்திலும் சுற்றுலா செல்லலாம். கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 26°C ஆகவும், குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15°C ஆகவும் இருக்கும்.
இங்குள்ள பசுமையான காபி தோட்டங்கள், மலைகள், அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சங்களாகும்.
கூர்க்கின் அழகிய மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் ஆகியவை ஸ்காட்லாந்தின் இயற்கை எழிலை ஒத்திருப்பதால், இந்த நகரம் "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கபடுகிறது.