தை மாதப் பிறப்பில் கொண்டாடப்படும் தைப்பொங்கல், தமிழர்களின் முக்கியப் பண்டிகை; இது இயற்கைக்கும், விவசாயத்திற்கும் உதவும் சூரிய பகவான், கால்நடைகள், மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருவிழா, இது மதச்சார்பற்ற பண்பாட்டு விழாவாகும்.
சூரிய பகவான் மகர ராசியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த நாள் மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கம். வங்கதேசம் போன்ற பகுதிகளில் புஷ் சங்கராந்தி என்று இதற்குப் பெயர்.
போகிப் பண்டிகை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் தொடக்கமாக இருப்பது போகிப் பண்டிகை. தை மாதம் பிறப்பதற்கு முந்தைய நாளான மார்கழி மாதத்தின் கடைசி நாளில் இது கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் பழைய பொருட்களை அகற்றி, எரிப்பதுடன் தேவையற்ற தீய எண்ணங்களையும் விலக்கி நல்ல எண்ணங்களை வரவேற்கும் பண்டிகையாக இப்பண்டிகை பார்க்கப்படுகிறது.
தைப் பொங்கல்: புதிதாக விளைந்த பச்சரிசியுடன் வெல்லம், பால் ஆகியவற்றைச் சேர்த்து பொங்கலிட்டு, புதிதாக அறுவடை செய்த கரும்புகளையும், நெல் மணிகளையும் சூரிய பகவானுக்கு படைத்து, நன்றி தெரிவிப்பது பொங்கல் கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு.
மாட்டுப் பொங்கல்: உழவுத் தொழிலுக்கு துணை புரியும் காளை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீட்டில் உள்ள மாடுகளை சுத்தம் செய்து, அலங்கரித்து மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மாட்டுப் பொங்கல்.
காணும் பொங்கல்: பொங்கல் பண்டிகையின் நிறைவாக வருவது காணும் பொங்கல். இது, நீர் நிலைகளுக்குச் சென்று நன்றி தெரிவிக்கும் நன்னாள். இந்த நாளில், சுற்றத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருடன் அருகில் உள்ள நீர் நிலைகளுக்குச் சென்று அவற்றுக்கு பூஜை செய்து வழிபட்டு, தங்களின் அன்பைப் பரிமாறிக் கொள்வது இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம்.
தைப்பொங்கலை முன்னிட்டு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டிப் பந்தயம், பானை உடைத்தல் உள்ளிட்ட பலவிதமான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுவது வழக்கம்.