ஒருநாள் கிரிக்கெட்: வித்தியாசமான சாதனையில் யாரும் எட்ட முடியாத இடத்தில் விராட் கோலி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.;
ராய்ப்பூர்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடரின் 2-வது போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் (105 ரன்கள்), விராட் கோலி (102 ரன்) சதம் விளாசினர். முதலாவது போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 359 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 110 ரன்கள் விளாசினார்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 6-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளிலும் விராட் கோலி சதம் விளாசியுள்ளார். முதலாவது ஆட்டத்தில் 135 ரன்கள் விளாசிய விராட் கோலி, 2-வது ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் கோலி சதம் காண்பது இது 11-வது முறையாகும். இந்த வித்தியாசமான சாதனையில் யாரும் எட்ட முடியாத இடத்தில் விராட் கோலி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் 6 முறை அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் கண்டுள்ளார்.