தேசிய அளவிலான சதுரங்க போட்டி: ஏர் இந்தியா வீராங்கனை குல்கர்னி சாம்பியன் பட்டம் வென்றார்

காரைக்குடியில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்களுக்கான சதுரங்க போட்டியில் ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.

Update: 2019-07-29 22:00 GMT
காரைக்குடி,

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 46-வது தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 22 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 106 பேர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் 2 சர்வதேச மாஸ்டர்கள், 7 கிராண்ட் மாஸ்டர்கள், 13 மகளிர் சர்வதேச மாஸ்டர்கள், 8 அகில உலக சதுரங்க மகளிர் மாஸ்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெறுவோர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இப்போட்டிகளின் இறுதி சுற்றில் நடப்பு ஆண்டு சாம்பியனான ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரத்யுஷா போடாவுடன் மோதினார். போட்டியின் ஆரம்பத்தில் பிரத்யுஷா போடா தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டார்.

ஆனாலும் பக்தி குல்கர்னியால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தமுடிய வில்லை. இதனால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் பக்தி குல்கர்னி பெற்ற ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு செட்டிநாடு பப்ளிக் பள்ளி தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

போட்டியில் முதலிடம் பெற்ற ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி 10 புள்ளிகள் பெற்று ரூ.4 லட்சம் மற்றும் வெற்றி கோப்பையை தட்டிச் சென்றார். 2-வது இடம் பெற்ற டெல்லியைச் சேர்ந்த வந்திகா அகர்வால் 8.5 புள்ளிகள் பெற்று ரூ.3 லட்சம் மற்றும் வெற்றி கோப்பையை பெற்றார்.

3-வது இடம் பிடித்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக் 8.5 புள்ளிகள் பெற்று ரூ.2 லட்சம் மற்றும் கோப்பையை பெற்றார். இது தவிர மேலும் 7 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் தமிழ் மாநில சதுரங்க கழக துணைத் தலைவர் ஆனந்தராஜ், செட்டிநாடு பப்ளிக் பள்ளி இயக்குனர் அருண்குமார் மற்றும் சதுரங்க கழகத்தின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்