சித்திரங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

10 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து உள்ளன.

Update: 2022-01-20 18:38 GMT
முதுகுளத்தூர்

10 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து உள்ளன.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இதில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம், நயினார்கோவில் செல்லும் சாலையில் தேர்தங்கல் பறவைகள் சரணாலயம், சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளன.
இதில் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் நீர்நிலையானது சுமார் 40 எக்டேர் பரப்பளவு கொண்டதாகும். 
1889-ம் ஆண்டு சித்திரங்குடி பறவைகள் சரணாலயமாக அரசால் அறிவிக்கப்பட்டது. அது போல் ஆண்டுதோறும் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு டிசம்பர் மாதம் முதல் பறவைகள் வரத்தொடங்கும். மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பறவைகள் திரும்பி சென்று விடும்.

வெளிநாட்டு பறவைகள் குவிந்தன

இந்த நிலையில் இந்த ஆண்டு முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான பறவைகள் வந்துள்ளன. இதில் சாம்பல்கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நத்தைகுத்தி நாரை, சின்னக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் நிற நாரை, முக்குளிப்பான் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ளன. 
இவ்வாறு குவிந்துள்ள கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இந்த நீர்நிலைகள் மற்றும் சுற்றியுள்ள வயல்வெளி பகுதிகளில் இரை தேடியபடி சரணாலயத்தின் நீர் நிலையில் உள்ள மரக்கிளைகளில் அழகாக கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது:-
வெள்ளப்பெருக்கால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை தண்ணீரும் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன. மேலும் இந்த ஆண்டு பெய்த நல்ல மழை காரணமாகவும் சரணாலயத்தில் நீரின் அளவு அதிகமாகவே உள்ளது.இதனால் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் இங்கு வந்துள்ளன.
குறிப்பாக சாம்பல் நிறகூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, முக்குளிப்பான் உள்ளிட்ட பலவிதமான பறவைகள் வந்துள்ளன. சரணாலயத்தில் இந்த ஆண்டு அதிகமான பறவைகள் வந்துள்ளதால் பறவைகளை வேட்டையாடுவதை தடுத்து கண்காணிக்கும் பணியில் கிராம மக்கள் வனத்துறையினருக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். 
இவ்வாறு அவர் கூறினார்.

வெடி வெடிக்க தடை

அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு அதிகமான பறவைகள் வந்து இருப்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல் பறவைகள் அதிகமாக வந்துள்ளதால்   சரணாலயத்தின் அருகே யாரும் வெடி வெடிக்க கூடாது என தடை விதித்து உள்ளனர். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு என்றனர்.

மேலும் செய்திகள்