பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்


Palani Murugan Temple Vaikasi Visakham Festival started with flag hoisting
x

பழனி வைகாசி விசாகத் திருவிழா தொடங்கிய நிலையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.

பழனி

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திர நாளன்று அவதரித்ததாக ஆன்மிக வரலாறு. இந்த நாள் 'வைகாசி விசாக' திருவிழாவாக அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் 10 நாட்கள் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு திருவிழா உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் பெரியநாயகி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதையடுத்து வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர் மண்டபத்தில் வைத்து விநாயகர் பூஜை, கொடிமரம், கொடிபடத்துக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை ஆணையர் வெங்கடேஷ், ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி காலையில் தந்த பல்லக்கிலும், இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு, யானை, தங்கக்குதிரை போன்ற வாகனங்களிலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கின்றனர். 6-ம் திருநாளான 21-ந்தேதி இரவு 6 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அடுத்த நாள் வைகாசி விசாக நாளன்று தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 6.30 மணிக்கு மங்கல இசை, பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story