ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா
x
தினத்தந்தி 30 April 2024 5:11 AM GMT (Updated: 30 April 2024 5:25 AM GMT)

நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

நீடாமங்கலம்,

குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆவதையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (புதன்கிழமை) மாலை நடக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோவிலின் சிறப்புகள் குறித்து காளமேகப்புலவரும் பாடியுள்ளார்.நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

ஆலங்குடி குருபகவான் கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது.

குருபகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாலை 5.19 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி கோவிலில் உள்ள குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.குருப்பெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை விழா கடந்த 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை முதல் கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

குருப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட வசதியாக தகரத்தால் ஆன பந்தல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

குருப்பெயர்ச்சிக்கு பின்னர் மீண்டும் அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 12-ந் தேதி வரை 2-வது கட்டமாக லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடக்கிறது. குருப்பெயர்ச்சியையொட்டி ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story