பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத 4 கட்ட தேர்தல்கள்


பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத 4 கட்ட தேர்தல்கள்
x

இன்னும் 163 தொகுதிகளுக்கு வருகிற 20, 25, ஜூன் 1-ந்தேதி என 3 கட்டங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

சென்னை,

இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்கான 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 66.16 சதவீதம் ஓட்டுப் பதிவு நடந்தது. இதில் தமிழகத்தில் மட்டும் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகின. கேரளா உள்பட 12 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதியில் நடந்த தேர்தலில் 66.71 சதவீத வாக்குப்பதிவுகளும், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 65.68 சதவீத வாக்குப்பதிவுகளும், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 67.25 சதவீத வாக்குப்பதிவுகளும் நடந்தன.

ஆக இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்தல் முடிந்து இருக்கிறது. இன்னும் 163 தொகுதிகளுக்கு வருகிற 20, 25, ஜூன் 1-ந்தேதி என 3 கட்டங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த 4 கட்ட தேர்தல்களிலும் ஆங்காங்கு ஒருசில சம்பவங்களைத்தவிர பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லாமல் அமைதியாகவே நடந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சுவாரஸ்யமான சொற்போர் நடந்தது.

குறிப்பாக, பிரதமர் நரேந்திரமோடி பேசிய கூட்டங்களில் எல்லாம், "இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்துக்களையெல்லாம் பிடுங்கி அதிக பிள்ளைகள் பெறுபவர்களுக்கு கொடுத்து விடுவார்கள், அதுபோல மதரீதியான இட ஒதுக்கீடு கொண்டு வந்துவிடுவார்கள்'' என்று பேசினார். இதை ராகுல் காந்தி மறுத்தார். "ஜூலை 1-ந்தேதி ஏழை பெண்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.8,500 டெபாசிட் செய்யப்படும்'' என்று ராகுல் காந்தி பதில் அடி கொடுத்தார். அமித்ஷா பேசும்போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை மீட்போம்'' என்று பிரகடனப்படுத்தினார். எல்லா கூட்டங்களிலும் பா.ஜனதா 370 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் சவால்விட்டு கூறினார்.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், "அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நரேந்திரமோடிக்கு 75 வயதாகிவிடும். பா.ஜனதா சட்டப்படி 75 வயதான முரளி மனோகர் ஜோஷி, அத்வானி ஆகியோர் பதவியில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டதுபோல, நரேந்திரமோடியிடம் இருந்து பிரதமர் பதவி பறிக்கப்படும். இப்போது நரேந்திரமோடி ஓட்டு கேட்பது, அமித்ஷா பிரதமராவதற்குத்தான்'' என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இதற்கு பதில் அளித்த அமித்ஷா, "அப்படி சட்டம் எதுவும் பா.ஜனதாவில் இல்லை, பிரதமராக நரேந்திரமோடிதான் 5 ஆண்டுகளுக்கும் இருப்பார்'' என்று இப்போது திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். ஆக மொத்தத்தில் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல் பிரசாரங்களிலும் இருதரப்பும் பேசிய பேச்சுக்கள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமலும், மக்களை கவரும் வகையிலும் இருந்தது.


Next Story