வார ராசிபலன் 12.5.2024 முதல் 18.5.2024 வரை


வார ராசிபலன் 12.5.2024 முதல் 18.5.2024 வரை
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்:

மேஷம்

செலவுகளை குறைக்கும் உத்திகளை கையாளுங்கள் இல்லையென்றால் இது உங்கள் கையிருப்பை பதம் பார்க்கும். சிலர் வாரத்தின் முற்பகுதியில் விருந்து உபசார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாரத்தின் பிற்பகுதியில், சிலருக்கு கல்வி தொழில் சம்பந்தமான பட்டங்களும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. எதிரிகள் தொல்லை அகன்று சவால்களை எதிர்கொள்ளும் தைரியம் மனதில் தோன்றும். பெண்கள், தங்கம் முதலான ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

சிலருக்கு பணி, தொழில் சம்பந்தமாக தற்காலிக இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. சிலருக்கு தொழிலில் சற்று தேக்க நிலை காணப்படும். எனினும் உங்கள் திறமையினால் அதை சிறப்பாக கையாளுவீர்கள். உங்கள் சொந்த விஷயங்களில் தலையிட்டு கலகம் விளைவிப்பார்கள். இது உங்கள் நிம்மதியை சற்று அசைத்து பார்க்கும். கவலை வேண்டாம். அவர்கள் முயற்சி வீணாகும். வாரத்தின் பிற்பகுதியில் தன வரவும், பொருள் வரவும் உண்டு. பெண்கள், வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை நீண்ட கால உபயோகத்திற்காக வாங்குவீர்கள்.

மிதுனம்

உங்கள் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு சிறந்த மருத்துவம் வாயிலான தீர்வுக்கு வழி பிறக்கும் வாரம் இது. கடந்த வாரம் இருந்த சொத்து பிரச்சினைகளுக்கு இந்த வாரம் நல்ல முடிவு ஏற்படும். இதில் உங்கள் பக்கம் சாதகமானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். சிலருக்கு புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். இதில் சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். முன்னெச்சரிக்கை தேவை. பெண்கள் வேலைப்பளு குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.

கடகம்

வாரத்தின் முற்பகுதியில் சந்தோஷத்திற்கு குறைவில்லை. மனைவி மக்களுடன் உல்லாச பயணம் உண்டு. காதலர்களுக்கு களிப்பூட்டும் வாரமாக அமையும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த இருபாலருக்கும் நல்ல வரன் அமைந்து திருமணம் நிச்சயம் செய்யும் வாரமாக அமையும். நீண்ட காலமாக வீடு, வாகனம் வாங்க மனதில் போட்ட திட்டம் சிலருக்கு கைக்கூடும். இது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையும். சிலர் குலதெய்வம் வழிபாடு செய்ய பயணம் மேற்கொள்வீர்கள். கடந்த வாரங்களில் இருந்த சிக்கன நிலை மாறி அதில் சிறிது தளர்வு ஏற்படும். பெண்களுக்கு அமைதியான வாரமாக அமையும்.

சிம்மம்

கடந்த சில வாரங்களாக இருந்து வந்த அமைதியற்ற சூழ்நிலை மாறும் வாரமாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தன வரவு உண்டு. புதிய திட்டங்களுக்கான முன்னேற்பாட்டு உத்திகளை மேற்கொள்ளுங்கள். சிலர் வெளிநாட்டு சுற்றுலா மேற்கொள்வீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். சிலர் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வீர்கள் இந்த வாரம் சற்று பிரச்சினைகள் விலகி, சுமூகமான சூழ்நிலை உருவாகும். பெண்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் கவனமாக பேசவும்.

கன்னி

இந்த வாரம் உங்கள் தோற்றத்தில் ஒரு பொலிவும், கவர்ச்சியும் உண்டாகும். தைரியத்துடன் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அவர்களது விருப்பப்படி நிறைவேறும். இதற்காக மேற்கொள்ளப்பட்ட நவீன சிகிச்சைகள் பலனை தரும் வாரமாக அமையும். எதிரிகள் விலகி, சிலர் வெற்றிக்கனி பறிக்கும் வாரமாக இருக்கும். உங்கள் செயல், முடிவுகள் மற்றவர்களுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது. சிலர் திருமணத்திற்கு தடையாக இருந்த சர்ப்பதோஷ நிவர்த்திக்கு நாகராஜரை வழிபடுவீர்கள். பெண்களுக்கு உற்சாகமான வாரமாக அமையும்.

துலாம்

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். காதலர்கள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வார்கள். கடந்த சில வாரங்களாக மனதில் வைத்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயண எண்ணங்கள் இந்த வாரம் கைகூடும். பயணங்களில் சற்று கவனம் தேவை மனதில் உற்சாகம் பெருகும். செலவுகள் அதிகரிக்கும். சிலர் புதிய வேலைக்கு மனு போட்டு அதில் சாதகமான பதிலையும் பெறுவீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்த்தால், அமைதிக்கு பங்கம் இல்லை. பெண்களுக்கு எதிர்ப்பாராத செலவுகள் ஏற்படும். அதை திறமையாக சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

நீண்ட வாரங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்த தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். காதலர்களின் கனவு பலிக்கும். சிலருக்கு, வீட்டில் மழலை ஒலி கேட்கும். குழந்தைகளின் மேல்கல்வித் திட்டங்களில் ஏற்பட்ட சுணக்கம் நீங்கி, திட்டத்தை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். சிலருக்கு, வேலை நிமித்தமாக தாய் தந்தையரை விட்டு பிரியும் வாரமாக அமையும். பழைய திட்டங்களை நிறைவேற்ற, புதிய பாதை கிடைக்கும். இந்த வாரம் இறுதியில், புதிய திட்டங்கள் செயல்படுத்துவதை தள்ளிவையுங்கள். பெண்கள் தங்கள் உடைமைகளின் மீது ஒரு பார்வை இருக்கட்டும்.

தனுசு

சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டத்திற்கான முயற்சிகளில் சற்று முன்னேற்றம் ஏற்படும். இருக்கும் இடம், நிலம் வாயிலான தன லாபம் உண்டு. எதிரிகள் தவுடு பொடி ஆவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாரத்தின் முற்பகுதியில் சற்று கவனமுடன் செயல்படுங்கள். சில முக்கியமான விஷயங்களில் இழுபறிநிலை தொடரும். பழைய பாக்கிகள் வந்து சேரும். இந்த வாரம் புதிதாக கடன் கொடுப்பது, ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்ற விஷயங்களை தள்ளிப் போடவும். பெண்களுக்கு இந்த வாரமும் உங்கள் விருப்பப்படியே நடக்கும்.

மகரம்

சிலருக்கு தனவரவுகள், சற்று முன்னும் பின்னும் ஆக இருக்கும். தொழில் சம்பந்தமாக வெளிநாடு அல்லது தொலைதூரத்தில் இருந்து மிக சாதகமான செய்திகள் வந்து சேரும். அனுகூலமான வாரமிது. மூத்த சகோதரி, சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக நின்று உங்கள் செல்வாக்கு உயர உறுதுணையாக இருப்பார்கள். அதேபோல அவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரம் உங்களால் முன்னேற்றம் அடையும். அலைச்சல்களை தவிர்க்க, தக்க ஆலோசனையும், திட்டமிடலும் மிக முக்கியம். பெண்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

இந்த வாரமும் உங்களுக்கு கொண்டாட்டம்தான். வெற்றி வாகை சூடும் நேரம் இது. எதிர்கால திட்டங்களுக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி வகைகள் ஏற்படும். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் கிட்டும். உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. திடீர் தனவரவுக்கு வாய்ப்புகள் உண்டு. ஆன்மீக செலவுகளை நீங்களாகவே முன்வந்து செய்வீர்கள். இதில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆத்ம திருப்தியும் கிட்டும். பெண்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று இறையருள் பெறுவீர்கள்.

மீனம்

சிலருக்கு சொந்த பந்தங்களின் ஆரோக்கியம் சம்பந்தமாக செலவுகள் வந்து சேரும். சமையல் தொழில் செய்பவர்கள் சற்று கவனமுடன் செயல்படுங்கள். சிலருக்கு ஆரோக்கிய மேம்பாட்டுக்கான முக்கிய செலவுகள் மேற்கொள்ளும் வாரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது. சிலருக்கு சளி தொல்லைகள் வந்து விலகும். வாய்வு சம்பந்தமான உபாதைகள் வராமல் இருக்க உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். பெண்கள் சற்று கவனமுடன் இருந்தால், மன அமைதிக்கு பங்கம் இல்லை.


Next Story