விழுப்புரம் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்


விழுப்புரம் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2021 4:08 PM GMT (Updated: 17 Nov 2021 4:20 PM GMT)

விழுப்புரம் வனத்துறை அலுவலகம் முன்பு காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


விழுப்புரம்

விவசாயிகள் தர்ணா

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று காலை அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகையன், நிர்வாகிகள் சம்பத், நாகராஜ், ராஜா, துளசிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது காட்டுப்பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்றக்கோரியும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

500 ஏக்கர் பயிர்கள் சேதம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மணிலா உள்ளிட்ட சுமார் 500 ஏக்கர் அளவிலான விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதை தடுக்குமாறு ஒவ்வொரு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும் வலியுறுத்தி வருகிறோம், ஆனால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கைகளைக்கூட வனத்துறை அதிகாரிகள் கேட்கவில்லை. இதனால்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். 

இதையடுத்து வனத்துறையினர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்ற வனத்துறையினர், இதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக வனத்துறை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story